கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள்: அரசு ஒன்றும் செய்ய முடியாது - அமைச்சர் எ.வ.வேலு..

 
ev velu


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவகங்களை அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்கு சென்றிருந்தார். அங்கு குடும்பத்துடன் அண்ணாமலையால் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், கிரிவலப்பாதையில் சாதுக்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பதை பார்த்து வருத்தமடைந்ததாக தெரிவித்தார்.    இதுகுறித்து  பேசிய  அவர், “கோவில் கிரிவலப்பாதையில் வலம் வந்தபோது அசைவ உணவகங்கள் இருந்தன. அதனை பார்த்த வருத்தமடைந்தேன். உணவு பழக்கம் வழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் ,பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் இருக்கும் வேதனையை பக்தர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.
 ravi
கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் இருப்பதற்கு அனுமதி கிடையாது. இதை அகற்ற முடிந்தவரை நான் முயற்சி செய்து கோரிக்கையை நிறைவேற்றி தருவேன். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் அமைதியான பூமி. கிரிவலம் வருவது மன நிம்மதியை தரக்கூடியது. உலக அளவில் இந்தியா ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உடைய நாடு. கிரிவலப் பாதையில் தங்கியுள்ள சாதுக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.  

 இந்நிலையில்  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்களை  அகற்றும் விவகாரத்தில் அரசு ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.   கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் வைப்பதும், அவற்றில் சாப்பிடுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும்,  பவுர்ணமி தினத்திலும், கார்த்திகை தீபத்தின் போதும் அசைவ உணவகங்களை அவர்களே மூடிவிடுவதாகவும் தெரிவித்தார்.