தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது ஏன்? - வடமாநில தொழிலாளர்கள் விளக்கம்

 
North indians

தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ பரவி வருகிறது. இது ஒருசிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்த வீடியோ உண்மை கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூர், மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் பணிபுரிந்துவரும் வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்துள்ளனர். அவர்கள் அதிக அளவில் தமிழகத்தை விட்டு வெளியேறி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்தது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் தங்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் ஹோலி பண்டிகை வருகிறது. ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காகவே நாங்கள் எங்களது சொந்த ஊர்களுக்கு செல்கிறோம். ஆனால் ஒருசிலர் தவறான வீடியோக்களை பார்த்துவிட்டு அச்சத்தில் வெளியேறியுள்ளனர். தவறான வீடியோ பரப்புவர்களின் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.