ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது அரியானாவை சேர்ந்த கும்பல் - வடக்கு மண்டல ஐஜி பேட்டி

 
IG Kannan

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது அரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பல் என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறியுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களை கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங் ஏடிஎம், தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம், போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து வந்த கொள்ளையர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொள்ளை கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அண்டை மாநிலங்களிலும், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

atm robbery

இதனிடையே திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய நபர் ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரிப் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொள்ளை கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளோம். ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃபில் குற்றவாளிகள் தங்கி இருந்த ஆதாரமும், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் கிடைத்துள்ளன. இவ்வாறு கூறினார்.