ஒரு கார்பன் மாதிரி கூட எடுக்கல.. ஆனா ஒரு நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பாஜக அரசு - சு.வெங்கடேசன்

 
su venkatesan su venkatesan

 “ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு” என சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார்.  

தமிழர்களின் தொன்மை பற்றிய கீழடி அகழாய்வின் அறிக்கைகள் சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கீழடி தொடர்பாக ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தாக்கல் செய்திருந்த அந்த அறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மத்திய பாஜக அரசு திருத்தம் செய்ய கோரியிருந்தது. பல ஆண்டுகளாக ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த மத்திய அரசு, திடீரென திருப்பி அனுப்பிவிட்டது. அத்துடன்  கீழடி ஆய்வுகளை  ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  

Image

இந்த நிலையில் ராஜஸ்தானில் ஒரு கார்பன் மாதிரியை கூட எடுக்காமல், ஒரு நதியே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர்.

Image

இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள். கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.

ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு.” என்று குறிப்பிட்டுள்ளார்.