”உழைப்பே உயர்வு தரும்"... தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் - ஓ.பன்னீர்செல்வம்

 
ops

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மே தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உழைப்பின் வலிமையை, உழைப்பாளர்களின் தியாகத்தினை உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து, ஆர்ப்பரித்துப் போராடி, உரிமைகளை வென்றெடுத்ததைக் குறிக்கும் உயரிய நாள் "மே தினம்" எனும் உழைப்பாளர் திருநாள் ஆகும். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், 1886 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு 'எட்டு மணி நேர வேலை' கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியதுதான் மே தினம் உருவானதற்கான அடித்தளம். உழைப்பின் உயர்வை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கினார். 

'எட்டு மணி நேர வேலை' உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளுக்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர் தியாகங்களும், இரத்தம் தோய்ந்த சிவப்பு வரலாறும் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் எட்டு மணி நேர வேலைக்கு ஆபத்து வந்தவுடன் அதற்கு எதிராக குரல் கொடுத்து அதனைத் தடுத்து நிறுத்திய இயக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்டெடுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் என்பதையும், தொழிலாளர்களின் பாதுகாப்பு அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் செயல்படும் என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். “உழைப்பே உயர்வு தரும்" என்பதன் அடிப்படையில், நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.