எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - வைத்திலிங்கம் ஆவேசம்

 
vaithilingam

எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் ஆவேசமாக கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

ops

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேசியதாவது: ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணத்திற்கு உறுதுணையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். தேர்தல் விதிப்படி இரட்டை இலை சின்னம், ஒருங்கிணைப்பாளருக்குத் தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நிச்சயம் அதை மக்கள் செய்வார்கள். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த இளைஞர்கள் உழைக்க வேண்டும் என்றார்.