ஒடிசா ரயில் விபத்து : நெஞ்சம் உடைந்து கண்ணீரை அஞ்சலியாக செலுத்துகிறேன் - வைகோ..

 
vaiko

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்..  

ஓடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை கோரமண்டல் விரைவு ரெயில்,  பெங்களூரு  ஹவுரா விரைவு ரெயில் மற்றும் சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது.  இதில் ரயிலில் பயணித்த ஏராளமான பயணிகள் பலியாகியுள்ளனர். இதுவரை   288 பேர்  உயிரிழந்ததாகவும்,  900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 13 ரயில் பெட்டிகள் முற்றிலுமாக உருகுலைந்து போயுள்ளன. அதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

train accident

அந்தவகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஒடிசா இரயில் விபத்தில் பலியான பயணிகள் எத்தனை திட்டங்களோடும், கனவுகளோடும் பயணித்திருப்பார்கள். அந்தத் திட்டங்களும், கனவுகளும் தவிடுபொடியாகி விட்டனவே! கொடிய இரயில் விபத்தில் உயிர்களை இழந்தோரின் குடும்பத்திற்கு என் நெஞ்சம் உடைந்து கண்ணீரை அஞ்சலியாக தெரிவித்துக்கொள்கின்றேன். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அனைவரின் மனிதாபிமானமும் நன்றிக்கு உரியதாகும். காயமுற்று சிகிச்சை பெறுவோர் முழுமையாக நலம்பெற வேண்டுமென இயற்கையை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.