மலக்குடலில் உண்டியலில் காணிக்கை.. திருட்டு பணத்தில் ரூ.100 கோடி சொத்து சேர்த்த தேவஸ்தான ஊழியர்..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் இருந்து வெளிநாட்டு கரன்சிகளை திருடி ஊழியர் ஒருவர் ₹100 கோடி வரையிலான சொத்துக்களை சேர்த்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார். இவர் அடிக்கடி கோயிலுக்கு வந்துபோவதால் ஏற்பட்ட பழக்கத்தின் பேரில், அவரை உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் நியமித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக தேவஸ்தான ஊழியரான ரவிக்குமார் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பணிசெய்து வந்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உண்டியல் காணிக்கையை பணம் எண்ணி முடித்துவிட்ட வந்த ரவிக்குமாரை, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலர்களை திருடி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பல ஆண்டுகாலமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக வரும் வெளிநாட்டு டாலர்களை கடத்தி திருட்டில் ஈடுபட்டு வந்ததும் இதன்மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதும் தெரியவந்துள்ளது. அடிக்குமாடி குடியிருப்புகள், மந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் என பல சொத்துபத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார் ரவிக்குமார்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் தேவதஸ்தானத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் எனவும், மக்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என்பதாலும் இதனை லோக் அதலாத் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் திருட்டு வழக்காக காவல் நிலையத்திலும் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் ரவிக்குமார் தனது சொத்தில் ஒரு பகுதியை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பது போல் எழுதி வாங்கிக்கொள்ளலாம் என முடிவுசெய்துள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புகொண்டதால், ரவிக்குமார் திருட்டு பணத்தில் வாங்கிய சொத்துக்களின் ஒரு பகுதியை லோக் அத்தலாத்தில் எழுதி வாங்கியுள்ளனர்.

இதில் மீதமிருந்த பல கோடி ரூபாய் சொத்துக்களை இரண்டு போலீஸ் அதிகாரிகளும், தேவஸ்தான உயர் அதிகாரி ஒருவரும் தங்களுடைய உறவினர்கள் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநில சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டதை அடுத்து, அம்மாநில இந்து அறலையத் துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டிம் “ கடந்த ஆட்சியில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக அப்போதைய அறங்காவலர் குழு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், தமிழ்நாட்டை சேர்ந்தவரான ரவிக்குமாரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து, காணிக்கை பணத்தை திருடி அதன் மூலம் வாங்கிய சொத்துக்களில் தேவஸ்தானத்திற்கு வழங்கிய சொத்துக்கள் தவிர மற்ற சொத்துக்களை யார், யாருக்கு எந்த சூழ்நிலையில் எழுதி கொடுத்தார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தாங்கள் உறவினர்களில் பெயர்களில் எழுதி வாங்கி கொண்ட அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.


