ஓமந்தூர் ராமசாமி பிறந்தநாளில் புகழை போற்றி வணங்குகிறேன் - ஈபிஎஸ்

 
ep

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்  பிறந்தநாளில் அவர்தம் கொள்கைகளையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

tn

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் வால்டர் சுடர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய நாட்டுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாதுக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என படேலுக்கு ஒமந்தூரார் எச்சரிக்கை செய்தார். அதன் பின்னரே ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டது. இந்த அரும்பணிக்காக படேல் அவர்கள் ஒமந்தூராரை மனம் திறந்து பாராட்டினார். ஆனால் பின்நாளில் எழுதப்பட்ட வரலாற்றில் ஒமந்தூராரின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஒமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மீகத்தின் பக்கம் சென்றது. அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். இவர் ஆகத்து 25, 1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.




இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு காந்தியவாதியாகவே வாழ்ந்தவரும், சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான, திரு.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் கொள்கைகளையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.