கோவை பீளமேடு அருகே பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

 
கோவை பீளமேடு அருகே பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

திருவண்ணாமலையில் இருந்து கோவை வந்த தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, உடனடியாக பயணிகள் இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

திருவண்ணாமலை யிலிருந்து ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் குளிர்சாதன ஆம்னி பேருந்து கோவை வந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் தாஸ் என்பவர் ஓட்டி வந்தார்.  30 பயணிகளுடன் வந்த பேருந்து அதிகாலை 6 மணியளவில் கோவை பீளமேடு  KMCH மருத்துவமனை அருகே வந்த பொழுது திடீரென பேருந்தில் டிசல் வாசம் அதிகமாக வந்துள்ளது. துதாரித்துக்கொண்ட ஓட்டுநர் தாஸ் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கினார். அதற்குள் பேருந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.