வருகிற 8ஆம் தேதி ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து சிபிஐ (எம்) கண்டன ஆர்ப்பாட்டம்!

 
balakrishnan cpm

  தமிழகத்திலும் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து பிப்ரவரி 8, 2024 அன்று  மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஐ (எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ஒன்றிய பாஜக மோடி அரசு தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜக அல்லாத எதிர்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதிப் பகிர்வு உள்ளிட்ட பல அம்சங்களில் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. ஆளுநர்களை பயன்படுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க மறுப்பதுடன், மாநிலங்களின் வளர்ச்சிக்கு கடன் பெறுவதற்கும் தடை விதிப்பது, அரசியல் சாசன சட்ட விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது போன்ற நாசகர வேலைகளில் ஒன்றிய பாஜக அரசு  செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகம், கேரளம், மேற்குவங்கம், பஞ்சாப், புதுதில்லி உள்ளிட்டு பல மாநிலங்களில் ஆளுநரை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை செயல்பட விடாமல் முடக்கம் செய்து வருகிறது.

தோழர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் தர்ணா போராட்டம்:

balakrishnan

                இந்நிலையில் ஒன்றிய அரசு  தொடுத்து வரும் தாக்குதலுக்கு எதிராகவும், கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் வருகிற 2024 பிப்ரவரி 8ந் தேதி அன்று புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசாங்கத்தின் சார்பாக முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.  இப்போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது.

                தமிழகத்திலும் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசையும், ஆளுநர்களையும் கண்டித்து பிப்ரவரி 8, 2024 அன்று  மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிபிஐ (எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாநில, மாவட்ட தலைவர்கள், தோழமைக் கட்சியினர் திரளாக கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக சக்திகளும் பேராதரவு தந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.