ஓணம் பண்டிகை : சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை...

 
ஓணம் பண்டிகை : சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை...


ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும்  ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.. பாதாள லோகத்தை ஆளும் மகாபலி சக்கரவர்த்தி பூவுலகிற்கு வருகை தருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நாட்களில் கேரள மக்கள் பாரம்பரிய உடையணிந்து  தங்கள் வீடுகளில் பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி வைத்து வழிபடுவர்.

உள்ளூர் விடுமுறை

இந்தப் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.  அந்தவகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை ( ஆகஸ்ட் 29ம் தேதி ) கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்ட அறிவிப்பில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் 29ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக செயல்படும்” என அறிவித்துள்ளார்.