விண்ணுயரப் புகழடைந்த ஒண்டிவீரனின் நினைவுநாள் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

 
tn

பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவரது புகழ் போற்றுவோம் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 281 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே  திருநெல்வேலி மாவட்டத்தில் நெற்கட்டும் சேவல் பாளையத்தில் மாவீரராக இருந்த பூலித்தேவனின் படை வீரரும் ,  படைத்தளபதியுமாக இருந்த ஒண்டிவீரன் பல போர்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தனது வீரத்தை பறைசாற்றியுள்ளார். இவரது வீரத்தை போற்றும் வகையில் கடந்த  2016 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. இன்று ஒண்டிவீரனின் நினைவு தினத்தை ஒட்டி தமிழக அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர் . ராமச்சந்திரன்,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்,  சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்!

2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி!

ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்! ' என்று பதிவிட்டுள்ளார்.