நிபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் பலி- தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இளைஞர் உயிரிழந்த நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமாரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் 24 வயதுடைய இளைஞர் நிபா வைரஸ் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அவருடன் தொடர்பில் இருந்த 170-க்கும் மேற்பட்டோரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் சுகாதார பணியாளர்கள் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக - கேரள எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அதில், தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு கடுமையான தலைவலி, உடல் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தொடர் அறிகுறிகள் இருந்தால் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட எல்லையோர சோதடைச்சாவடிகளில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். வேறு மாநிலத்தில் இருந்து அறிகுறிகளோடு வந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சந்தேகிக்கும் வகையில் அறிகுறி உள்ள நபர்களை தனிமைபடுத்தி கண்காணிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.