கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை! வடநாட்டு கும்பல் கைது
தமிழகத்திற்கு போதைக்காக மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரை கோவை மாநகர தனிப்படை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 20 ஆயிரம் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர காவல் துறை சார்பில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த போலீஸார் அவர்கள் மூலம் மொத்த விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து அவர்களையும் கைது செய்து, அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கினர். மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெங்களூரில் இருந்து மொத்த விற்பனை செய்யும் நபர்களை போலீஸார் கைதுச் செய்தனர்.
இதனிடையே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து ”டெபெண்டடோல்”, ”நைட்ராஸெபம்” ஆகிய மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அதனை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் போதைக்காக மாத்திரைகளை வடமாநிலத்ட்தில் இருந்து மொத்தமாக வாங்கி அதனை கோவையில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ரிஸ்வான் சுகைல் (24), ஆசிக் செரிப் (24) ஆகிய இருவரை கடந்த ஜூலை மாதம் கைது செய்து 1000 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் மூலம் கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய மூளையாக செயல்பட்டு வந்த பூலுவபட்டியை சேர்ந்த பட்டதாரி பெண் மரியா (30) உள்ளிட்ட 6 பேரை தனிப்படை போலீஸார் கடந்த ஜூலை 16 ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மரியாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போதைக்காக மாத்திரைகளை ஹரியானாவை சேர்ந்த தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை ஹரியான சென்று விசாரணை மேற்கொண்டு சோதனையிட்டு தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் துலீப் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சச்சின் கர்க் (41) என்பவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியான மாநில எல்லையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த சச்சின் கர்க் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் போதைக்காக பயன்படுத்தும் மருந்துகளை தனித்தனியாக தயாரித்து, அதனை இந்தியா மார்ட் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இவர் போலியான ஜி.எஸ்.டி பில்லை கொண்டு மருந்து விற்பனையில் ஈடுபட்டதும், கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு போதை மாத்திரையை விற்பனை செய்து வந்ததும், 100 மாத்திரைகளை ரூ.600க்கு வாங்கி அதனை கோவைக்கு வரவழைத்து இங்கு ஏஜெண்டுகளுக்கு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
சில்லரை விற்பனையாளர்கள் அதனை ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சச்சின் கர்க்கை கைது செய்த போலீஸார் சுமார் 20 ஆயிரம் மாத்திரைகள், செல்போன்கள் பறிமுதல் செய்தனர். ஹரியானா மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது வரை கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மாத்திரை தயாரிப்பு நிறுவன உரிமையாளரை கோவை போலீஸார் கைது செய்த நிலையில் ஜி.எஸ்.டி மோசடிகள் தொடர்பாகவும் ஜி.எஸ்.டி, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.