ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

 
assembly

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.  அதனைத்தொடர்ந்து  கடந்த 20ம் தேதி  2023 -24ம் நிதியாண்டிற்கான பொது  நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், 21ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  நேற்று  யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று தொடங்கியது. 

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த ம்சோதா ஆளுநரால் இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டது.இந்நிலையில்  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் இன்று  மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாளுக்குள் நாள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மிகவும் கனத்த இதயத்துடன் தான் சட்டமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது என கூறினார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததால் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது.