அமித்ஷாவின் பேச்சை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம்
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வகுத்த விதிகளை மீறி, எடப்பாடி பழனிசாமி தனக்காக மாற்றி அமைத்துள்ளார். பணம் படைத்தவர்கள் மட்டுமே அதிமுகவில் பொறுப்புக்கு வர முடியும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓபிஎஸ் வருகைக்கு முன்பு போடப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு கட்சித் தொண்டரான முதியவர் ஒருவர் குத்தாட்டம் போட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று கட்சித் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வைகள் அணிவித்தனர். அப்போது எம்ஜிஆர் தோற்றம் கொண்ட தொண்டர் ஒருவர், சால்வை அணிவிக்க வந்தபோது அந்த சால்வையை கையில் வாங்கி ஓ.பன்னீர்செல்வம் அவருக்கே திருப்பி அணிவித்தார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம், “எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளார். கட்சியை மீண்டும் மீட்டெடுத்து தொண்டர்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வகுத்த விதிகளை மீறி, எடப்பாடி பழனிசாமி தனக்காக மாற்றி அமைத்துள்ளார். அதிமுகவில் இப்போது பணம் படைத்தவர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும். பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் அவரை அந்த பதவியில் இருந்து தூக்கி எறிவார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் காலத்தில் தமிழகத்திற்கு வந்த அமித்ஷா சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் மீண்டும் இணைக்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதனால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். சசிகலாவின் காலில் விழுந்து ஊர்ந்து, ஊர்ந்து போய் முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சித்தார்.