அமித்ஷாவை சந்தித்தது ஏன்?- ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
பிரிந்து இருக்கக்கூடிய அதிமுக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அமித்ஷாவை சந்தித்தாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்பு ஓ.பன்னீர்செல்வம் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீங்கள் இணைவதாக தகவல் வருகிறதே என எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது இங்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளை எடுத்துக் கூறினேன். கவனமாக கேட்டு, தன்னுடைய அன்பான வார்த்தைகளை கூறி அனுப்பியதாக தெரிவித்தார். அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா இந்த இயக்கத்தை வழி நடத்தி இருந்தார். அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம் என்றார்.
15ஆம் தேதிக்கு பிறகு தனி கட்சி ஆரம்பிப்பீர்கள் என்று சொன்னீர்களே என்ற கேள்விக்கு, இந்த கேள்வியே தப்பு, நான் எந்த சூழ்நிலையில் எப்போதும் தனி கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை என்றார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் என்னுடன் பேசவில்லை நானும் அவரிடம் பேசவில்லை. அடுத்த கட்ட நகர்வாக தொண்டர்களின் எண்ணப்படி தான் நிகழும், என்றார். 26 தேர்தலில் உங்கள் பங்கு என்ன என்ற கேள்விக்கு அதற்கு ஏன் அவசரப்படுகிறீர்கள் இன்னும் ஆறு மாதம் உள்ளது, பொறுத்திருங்கள், நல்ல செய்தி வரும் என பதிலளித்தார். ஜனநாயக நாடு இங்கு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதிமுக தொண்டர்களின் இயக்கம், புரட்சித்தலைவரின் இயக்கம் பழுதுபடாது. எங்களின் நோக்கமும் கொள்கையும் ஒன்று. பிரிந்து இருக்கக்கூடிய அதிமுக சக்திகள் ஒன்று பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அமைச்சர் அமித்ஷாவை சென்று சந்தித்தோம், என்றார்.


