வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்- போர்க்கால நடவடிக்கை தேவை: ஓபிஎஸ்

 
dengue dengue

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ops

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி உள்ள நிலையில், இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2020 ஆம் ஆண்டு 2410 ஆக இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2021 ஆம் ஆண்டு 6039 ஆகவும், 2022 ஆம் ஆண்டு 6430 ஆகவும், 2023 ஆம் ஆண்டு 9121 ஆகவும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 11,742 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 205 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்து வருகின்ற நிலையில், அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமான ஈடிஸ் கொசுக்கள் தூய்மையான நீர்த் தேக்கங்களில் உற்பத்தியாவதால், 'வருமுன் காப்போம்' என்பதற்கேற்ப ஆங்காங்கே சாலையோரங்களில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

dengue

இது மட்டுமல்லாமல், வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, அதற்கான கையேடு வழங்கப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் தேங்கியுள்ள நீர் அகற்றப்பட்டதாகத் தெரியவில்லை. சொல்லில் இருக்கின்ற வேகம் செயலில் இருப்பதாகத் தெரியவில்லை.

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், பொது இடங்களில் சுகாதாரப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும், சாலைகளில் தேங்கும் தண்ணீரை அவ்வப்போது அகற்றவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான படுக்கைகளை ஏற்படுத்தவும், இதற்குத் தேவையான மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ளவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.