ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதா? உடனே ரத்து செய்க- ஓபிஎஸ்

 
ops

தமிழ்நாட்டில் வாழும் பொதுமக்கள் ஏற்கெனவே பல வரிகளால் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருக்கின்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை 01-09-2024 முதல் உயர்த்த இருப்பதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, சுங்கக் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள்,  2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி, குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும் என்றும், இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன என்றும், தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.  மூன்றாண்டுகள் கழிந்தும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவோ, சுங்கக் கட்டணத்தை குறைக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, இன்று தமிழ்நாட்டில் 64 சுங்கச் சாவடிகள் இயங்கிக் கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இவற்றின் கட்டணமும் ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. 

சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதன் நோக்கமே, சாலை அமைப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்வதற்காகத்தான். இந்த இலக்கை எட்டிய பின், சாலை பராமரிப்புச் செலவிற்காக மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இதன்படி பார்த்தால், கட்டணத்தை குறைப்பதுதான் முறையானது.  ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்காண்டு உயர்த்துவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.    இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், மக்களவை தேர்தலுக்குப் பின் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 01-09-2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 17 சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாகவும், இதன் விளைவாக 150 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த கட்டண உயர்வு, சுற்றுலாப் பயணிகள் செல்லும் வாகனங்களின் கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், சரக்கு லாரிகளின் கட்டண உயர்வுக்கும் வழிவகுத்து அதன்மூலம் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரவும் வழிவகுக்கும். மேலும், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணமும் உயரக்கூடும்.  சுங்கக் கட்டண உயர்வு என்பது ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது.

OPS
 
ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 01-09-2024 முதல் உயர்த்தப்பட உள்ள சுங்கக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை விதிகளுக்கேற்ப குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.