3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் ஓபன் டென்னிஸ் தொடர்
3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் மீண்டும் சர்வதேச அளவிலான WTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது.

நடப்பாண்டு WTA 250 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்த உள்ளதாக உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி WTA 250 மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் WTA 250 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் அதன் பின்னர் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் WTA 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில் மொத்தம் 32 ஒற்றையர் பிரிவு ஆட்டங்களும் 16 இரட்டையர் பிரிவு ஆட்டடங்களும் நடைபெற உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறியதாவது, சென்னையில் மீண்டும் பெரிய அளவிலான சர்வதேச டென்னிஸ் போட்டியை கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனளித்துள்ளன. இதற்காக முழு ஆதரவு அளித்த தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நன்றிகள். சென்னையில் சர்வதேச வீரர்கள் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் உடன் நாங்களும் இந்த டென்னிஸ் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளதாக கூறினார்.


