’ஆபரேஷன் சிந்தூர்' மோடியால்தான் சாத்தியம் - ராஜ்நாத் சிங் விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் மக்கள் பாதிக்கப்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிரவாத முகாம்களை நோக்கி இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22 அன்று 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பாராட்டினார்.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆபரேஷன் சிந்தூர் முழு வெற்றி பெற்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா தன் ராணுவ பலத்தை காட்டியுள்ளது. இந்திய ராணுவம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. பிரதமர் மோடியால்தான் இத்தாக்குதல் சாத்தியமாகியுள்ளது. நமது ராணுவ படைகள் சுதந்திரமாக செயல்பட ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. மோடியின் தெளிவான திட்டமிடல்தான் தாக்குதலை சாத்தியமாகியுள்ளது. அப்பாவி மக்களை கொலை செய்தவர்களைத்தான் ராணுவம் அழித்தது. நமது படைகள் துல்லியமாக பயங்கரவாத பயிற்சி முகாம்களை தாக்கி அழித்தன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை. இந்தியாவிற்கு முப்படைகளும் பெருமை சேர்த்துள்ளன, மோடியின் வழிகாட்டுதலின்கீழ், நமது ஆயுதப்படைகள் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளன” என்றார்.


