ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகள் முடிவு..!
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்க இருந்தார். ஆனால் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் அவரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறி அவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த ஒரு வார காலமாகவே மக்களவையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை என்று தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவையில் பேசுவதற்கு அனுமதி மறுத்ததற்காகவும், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நடவடிக்கை எடுக்காததற்காகவும், காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக் கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன.
இது தொடர்பான சட்டப்பூர்வ தீர்மானத்தை மக்களவையில் கொண்டு வருவதற்காக, 100 எம்.பிக்களிடம் கையொப்பம் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முடிவானது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். இதே போல் இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டீரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்பி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மல்லிகார்ஜுனா கார்கே அறையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, கே.சி. வேணுகோபாலிடம், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “ஆளும் கட்சியினர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதுவே எதிர்க்கட்சி தலைவரோ அல்லது பிற எதிர்க்கட்சி தலைவர்களோ பேச அனுமதிக்கப்படுவதே இல்லை. எதிர்க்கட்சிகளிடம் இதுபோன்ற அணுகுமுறை இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை” என்று கூறினார்.
காலை 11 மணியளவில் மக்களவை கூடியது. அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையானது மதியம் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


