டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் இரட்டை வேடம் போடும் தி.மு.க.விற்கு கடும் கண்டனம் - ஓபிஎஸ்

 
ops ops

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில் இரட்டை வேடம் போடும் தி.மு.க.விற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம வள சுரங்கம் அமைக்கப்பட்டால், அது சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக நானும் 20-11-2024 தேதியிட்ட அறிக்கை வாயிலாக எனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தேன். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
இதனையடுத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் ச்சர் அவர்கள், தாமதமாக, 29-11-2024 தேதியிட்ட கடிதம் வாயிலாக மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் 03-10-2023 தேதியிட்ட கடிதம் வாயிலாக தமிழ்நாட்டின் கவலையை மத்திய அரசுக்குத் தெரிவித்ததாகவும், ஆனால், நாட்டின் நன்மையைச் சுட்டிக்காட்டி இதனை 02-11-2023 கடிதம் மூலம் மத்திய கனிமவளத் துறை அமைச்சர் நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். அதே சமயத்தில், உள்ளூர் மக்களின் சமூக பொருளாதாரக் கவலைகள் தங்களுக்கு தெரியும் என்றும், மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் கனிமங்களை எடுப்பதற்கு மத்திய அரசிடம் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அனுமதி கோரியுள்ளதாகவும், டங்ஸ்டன் கனிமம் என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், டங்ஸ்டன் மூலம் லித்தியம் டங்ஸ்டன் ஆக்சைடு பேட்டரிகளை உற்பத்தி செய்யலாம் என்றும் தமிழ்நாடு கனிம வளத் துறை உயர் அதிகாரி தெரிவித்ததாக 18-10-2023 நாளிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வந்துள்ளது. இந்தச் செய்தியும், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் 03-10-2023 அன்று எழுதியதாக கூறப்படும் கடிதமும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.

ops

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான 2023 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டமுன்வடிவு நாடாளுமன்ற மக்களவையில் 28-07-2023 அன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தச் சட்டத்தில், மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் திரு. என்.கே. பிரேமச்சந்திரன் அவர்கள் கூறி, மேற்படி சட்டமுன்வடிவிற்கு தன் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். ஆனால், இது குறித்த விவாதத்தில் தி.மு.க.வின் சார்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இதே சட்டமுன்வடிவு நாடாளுமன்ற மாநிலங்களவையில் 02-08-2023 அன்று விவாதத்திற்கு வந்த போது. இதனை ஆதரித்து டாக்டர் மு. தம்பிதுரை மற்றும் திரு. ஜி.கே. வாசன் ஆகியோர் பேசியுள்ளனர். தி.மு.க.வின் சார்பில் எவ்விதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மேற்படி சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மேற்படி சட்டம் 09-08-2023 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 29-02-2024 அன்று ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்பட்டு, அதன் அடிப்படையில், 07-11-2024 அன்று மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமை இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசால் அளிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை, கிட்டத்தட்ட 16 மாதங்கள் இதற்கான செயல்முறைகள் நடைபெற்றபோது தி.மு.க. சார்பில் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இந்த ஒப்பந்தத்தை கைவிடும்படி தமிழ்நாடு அரசின் சார்பில் எவ்வித கோரிக்கையும் 07-11-2024 வரை வைக்கப்படவில்லை என்று மத்திய அரசின் சுரங்க அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. ஆனால், இப்போது இதனை எதிர்ப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு தற்போது பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்த்த வருகின்ற நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது தொடர்பாக கீழ்க்காணும் வினாக்கள் மக்கள் மனங்களில் எழுந்துள்ளன. 1. 2023 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்துதல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசிதழ் எண். 9, நாள் 09-08-2023, பக்கம் 3-ல், 10BA என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் 5-வது பத்தியில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், சுரங்க உரிமை எப்பகுதியில் அளிக்கப்பட வேண்டுமென்ற அறிவிக்கையை வெளியிட மாநில அரசை மத்திய அரசு கேட்கும் என்றும், மாநில அரசு அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த அறிவிக்கையை வெளியிடவில்லை என்றால், அந்தக் கால அளவு முடிந்த பின்பு, மத்திய அரசு அது குறித்த அறிவிக்கையை வெளியிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என்று புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் திரு. என்.கே. பிரேமச்சந்திரன் அவர்கள் பேசியிருக்கிறார். 


இது தி.மு.க. அரசுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியும் என்றால், மேற்படி சட்டத்தை நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஏன் எதிர்க்கவில்லை? தெரியாது என்றால், மாநில உரிமையின்மீது அக்கறை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? 2. மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் மத்திய கனிம வளத் துறை அமைச்சருக்கு 03-10-2023 அன்று கடிதம் எழுதியதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். அந்தக் கடிதத்தின் நகலை வெளியிட முடியுமா?  மாலிப்டினம் மற்றும் டங்ஸ்டன் கனிமங்களை எடுப்பதற்கு மத்திய அரசிடம் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அனுமதி கோரியுள்ளதாக உயர் அதிகாரி தெரிவித்த கருத்து 18-10-2023 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்துள்ளது. இந்தச் செய்தியை தி.மு.க. அரசு மறுக்கவில்லை. எனவே, இதில் உண்மை இருக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே, தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை சார்பில் அனுமதி கோரிய கடிதத்தின் நகலை மக்களின் பார்வைக்கு வெளியிட முடியுமா? டங்ஸ்டன் கரங்கம் அமைப்பது தொடர்பாக இந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதற்கு தி.மு.க.வின் பதில் என்ன? மேற்படி வினாக்களுக்கான விடைகளை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக மதுரை மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்டு. இது குறித்த உண்மையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

============================