பெட்ரோ கெமிக்கல் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் : ஓபிஎஸ் வலியுறுத்தல்!!

 
ops mk stalin

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்   பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆண்டிற்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பணியினை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து , சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருவதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம்,  அப்பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது.

ops

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதி, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் வகையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது.காவிரி டெல்டா மண்டலத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் மண்டலத்தில் உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு . 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை எம்எஸ்எம்இ அமைப்பினால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்த தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  அந்த தொழிலுக்கு ஆக்கமும் , ஊக்கமும் அளித்துவரும் அரசாக திமுக அரசு மாறிவிட்டது.  இதுகுறித்து தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,  தடை செய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோகெமிக்கல் இல்லை என்று பதில் அளித்ததாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

TNGOVT

2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22 (2)இல் இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.  சட்டத்தில் இடம் இல்லை என்றால் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்து,  காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்பதும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி , வேளாண் தொழில் சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  அதிமுக கழகத்தின் நிலைப்பாடும் இதுதான். மக்களுக்காக சட்டமே தவிர சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பகுதியில்,  பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.