ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! ராமநாதபுரம் தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி..!

 
1

கடந்த 2 மாத காலமாகவே, பாஜக அணியில் ஓபிஎஸ் இடம்பெறுவது குறித்தும், ஓபிஎஸ் டீமுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும்? என்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டே வந்தது.ஓபிஎஸ் டீமில் நிர்வாகிகள் அவ்வளவாக இல்லை, தேர்தலில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் கிளம்பிய நிலையில், ஒரேநாளில் 414 பேர் விருப்ப மனு தந்து அசரடித்திருந்தது ஓபிஎஸ் தரப்புக்கும் பெருத்த மகிழ்ச்சியை தந்திருந்தது. அதுமட்டுமல்ல, இந்த தேர்தலில் ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் 2 பேருமே களமிறங்க போவதால், இவர்கள் இருவரின் சார்பிலும் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், இந்த கணிப்புகளும், தகவல்களும் தூள் தூளாக தகர்ந்துள்ளன.. ஓபிஎஸ்ஸுக்கு சின்னம் பெருத்த சிக்கலாக எழும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட முடியாமல், தாமரை சின்னத்தையும் ஏற்க முடியாமல், தனிச்சின்னத்தில் போட்டியிடும் நிலைமை வந்துள்ளது. அத்துடன், தேர்தலில் நின்று தொண்டர்களின் பலத்தை அறிவதற்கு 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்த நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு 1 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தத் தொகுதியில் தொண்டரை நிறுத்துவதைவிட, தானே களத்தில் இறங்கி பலத்தை நிரூபிக்க போகிறேன் என்றும் ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார். அதிக தொகுதி தர பாஜக விருப்பமாக இருந்தும்கூட, இரட்டை இலை சின்னம் இல்லாததால், ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் சொல்கிறார்..

ஆனால், இன்னும் எந்த சின்னம் என்று முடிவாகவில்லை.. வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுள்ளதால், அதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்னொரு சிக்கல் அங்கே முளைத்துள்ளது.. ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்..

ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு இடையே கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் ஓட்டுகள் பிரியும் வாய்ப்புள்ளதால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்