ஓபிஎஸ் இன்னும் நிதானமாக செய்திருக்க வேண்டும் - தமிழிசை கருத்து..!!
ஓ.பன்னீர்செல்வம் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வுகளை செய்திருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பல முறை தற்காலிக முதலமைச்சராகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் அதன்பிறகு கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். கட்சியை கைப்பற்றுவது, இரட்டை இலை சின்னம் பெறுவது என அனைத்திலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதன்பிறகு ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே பார்க்கப்பட்ட நிலையில், பாஜகவும் அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும் அவர்களை சந்திக்க பன்னீர்செல்வம் நேரம் கெட்டும், அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியும், அவர்கள் சந்திக்க அனுமதி அளிக்காததால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருந்து வந்தார். இதனையடுத்து மத்திய அரசை விமர்சித்து கடிதம் வெளியிட்டு வந்த ஓபிஎஸ், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் கூட்டணி குறித்து தேர்தல் சயமத்தில் அறிவிக்கப்படும் என்றும், மாவட்ட வாரியாக மக்களை சந்திக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓபிஎஸ், 6 முறை தொலைபேசியில் அழைத்தும் , தனது அழைப்பை நயினார் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். அதேநேரம் தன்னையும், தன் உதவியாளரையும் ஓ.பன்னீர்செல்வம் அழைக்கவில்லை என நயினார் நாகேந்திரன் கூறிவருகிறார்.
இருவருக்கிடையேயான கருத்து மோதலுக்கு பாஜக தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஓ.பன்னீர்செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. இதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நயினார் நாகேந்திரனை குற்றம் சொல்வதை பாஜகவை சேர்ந்த நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஏதாவது கருத்து மோதல் இருந்தால், ஓபிஎஸ் வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் சற்று நிதானமாக செயல்பட்டு தனது அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு இருக்கலாம்” என்று கூறினார்.


