வேலை நேரத்தை 12-மணி நேரமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

 
ops

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12-மணி நேரமாக மாற்றும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை, பெறுவதற்கோ பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது" என்ற கார்ல் மார்க்ஸின் அறைகூவல் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும், "8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு" என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்கும் அடித்தளமாக அமைந்தது. எட்டு மணி நேர வேலை என்பதற்குப் பின்னால் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு உண்டு. இதனைத் தொடர்ந்து பெறப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்கங்கள் என பல உரிமைகளுக்கு மே தின போராட்டமே விதையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு, தேசிய விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றால், இதற்குக் காரணம், அவர்கள் போராடி பெற்ற உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவர்களுடைய பல கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதுதான். உலகம் என்கின்ற இயக்கம் நின்றுவிடாமல் இன்று சுழன்று கொண்டிருக்கிறது என்றால், நவீன மாற்றங்கள் இந்த உலகத்தில் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் வியர்வைத் துளிகள்.  

Ops

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் பெற்ற அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்பது நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவின் மூலம் சிதைக்கப்பட்டு இருக்கிறது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பணி நேரம், ஓய்வு, இடைவேளை, கூடுதல் நேரம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வர வழிவகை செய்திருப்பது தொழிலாளர்களை துன்புறுத்துவது போல் ஆகும்.  இதன்மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் வெகு தூரத்திலிருந்து பணிக்கு வந்து செல்கிறார்கள். தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலில் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லக்கூடிய பயண நேரமே நான்கு மணி நேரம் ஆகிவிடுகிறது. மீதி இருக்கின்ற எட்டு மணி நேரத்தில் தொழிலாளர்கள் எப்படி ஓய்வு எடுக்க முடியும்; குடும்பத்தை எப்படி கவனிக்க முடியும் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் 'முதலீடு' என்பதன் அடிப்படையில் சட்டமுன்வடிவை நிறைவேற்றியிருப்பது தொழிலாளர்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்றதொரு சட்டத்தை மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு இயற்றியபோது அதனை வலுவாக எதிர்த்துவிட்டு, இன்று அதே சட்டத்தை இயற்றியிருப்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுகிறது. பயண நேரம் உட்பட, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை என்பது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். 

'சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத இயலும்' என்ற பழமொழிக்கேற்ப தொழிலாளர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, அவர்கள் விரும்பியபடி தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேற்படி தொழிலாளர் விரோத சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த சட்டமுன்வடிவினை பொறுக்குக் குழுவிற்கு (Select Committee) அனுப்ப வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்தினேன். இந்த சட்டமுன்வடிவிற்கு தி.மு.க.வின் தோழமை கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி மேற்படி சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது மிகுந்த வேதனைக்குரியது. இந்தச் சட்டமுன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது முதலமைச்சர் இருக்கையில் இல்லாதது வியப்பாக இருக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய சட்டமுன்வடிவை உடனடியாக திரும்பப் பெற உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்