“ஓபிஎஸ்-ன் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.. இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கக்கூடாது” - டிடிவி தினகரன்..!!
ஓ.பி.எஸ்-ன் முடிவு அதிர்ச்சி அளிப்பதாவும், இதுபோன்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அண்மைக்காலமாக பாஜகவில் இருந்தும் ஓரம்கட்டப்பட்டு வருகிறார். மோடி மற்றும் அமித்ஷாவும் கூட ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்த்து வந்தனர். இதனையடுத்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்துமோதல் நீடித்து வரும் நிலையில், இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது அதிர்ச்சியளிக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவு தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமளிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாஜக கூட்டணியிலும், அக்கட்சியின் தலைவர்களுடனும் நல்ல உறவில் இருந்தார். அந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கக் கூடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய தனது முடிவை ஓ.பன்னீர்செல்வம் மாற்றிக்கொள்ள வேண்டும். அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்கு அழைத்துவவ பாஜகவினர் முயற்சிக்க வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷா தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பார்.” என்று கூறினார்.


