நாளை மறுதினம் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு..!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை தொடங்கினார். மேலும், இந்த அமைப்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதம் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 15ம் தேதி (நாளை மறுதினம் - திங்கட்கிழமை) முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
இதனிடையே, ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்குமுன் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். இதனை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி கோவை சென்ற ஓ.பன்னீர் செல்வம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் அரசியல் இறுதி முடிவு தொடர்பான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் ஆலோசனை கூட்டம் எப்போது நடைபெறும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


