முதல்வராக பதவியேற்கும் தருவாயிலும் விஜய்யை விடாமல் துரத்தும் பிரச்சனை- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 
விஜய்

வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில்  நடிகர் விஜய் வீட்டில்  நடத்திய சோதனையில், புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாததை கண்டறிந்து,  ஒரு கோடியே 50  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யபட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில்,  வருமான வரித்துறை சோதனைகளின்போது பெறப்பட்ட ஆவணங்கள், விஜயின் வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள், ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும், வருமானத்தை மறைத்ததற்காக மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட   கோரியும் கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிரோத பணப்பரிமாற்ற  தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்குத் தேவையான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக, அந்த ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்ப உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்த.

இந்த மனுவுக்கு எண்ணிடாத பதிவுத்துறை,  விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்க,   தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட்டது. இந்த வழக்கை  விசாரித்த தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வு, ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரணைக்கு உகந்ததா என்பதை குறித்து முடிவு செய்வதற்காக எண்ணிடும் பணியை முடிக்காமல் இருக்க கூடாது எனக் கூறி, தவெக தலைவர் விஜய்க்கு எதிரான இந்த மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு உகந்ததா என்ற தலைப்பில், விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி அமர்வு உத்தரவின்படி, தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கின் எண்ணிடும் நடைமுறை இன்று முடிந்துள்ளது. வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.