நேர்மையின் அடையாளமாக மாறிய பத்மா..! தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

 
1 1

சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் கடந்த 11-ம் தேதி தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தவர் பத்மா. அப்போது எதிர்பாராத விதமாக குப்பைகளுக்கு இடையே கிடந்த ஒரு பையைக் கண்டெடுத்தார். அதைத் திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 45 சவரன் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏழ்மையான சூழலில் வாழ்ந்த போதிலும், ஒரு கணம் கூடத் தயங்காமல் அந்த விலைமதிப்பற்ற நகைகளை உடனடியாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பத்மா. இவரது இந்தத் தன்னலமற்ற நேர்மை, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பத்மாவின் இந்த உயரிய பண்பைப் பாராட்டும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், அவரது நேர்மைக்கு அங்கீகாரமாக அரசு சார்பில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கிக் கௌரவித்தார். அரசின் இந்த உடனடிப் பாராட்டு, சமூகத்தில் நேர்மையாகச் செயல்படுபவர்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பத்மாவின் நேர்மையைக் கொண்டாடி வந்தனர்.

இந்தச் செய்தியை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மாவைத் தனது இல்லத்திற்கு நேரில் அழைத்துச் சிறப்பித்தார். பத்மாவை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்ற ரஜினி, அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். “இத்தகைய நேர்மைதான் சமூகத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்” என்று நெகிழ்ந்து பாராட்டியவர், பத்மாவுக்குத் தனது அன்பளிப்பாக ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அணிவித்தார். ரஜினிகாந்துடன் பத்மா கலந்துரையாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தூய்மைப் பணியாளர் பத்மாவின் இந்தச் செயல், சமூகத்தில் நேர்மை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. “நேர்மைக்குக் கிடைத்த உண்மையான மரியாதை இது” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு சாதாரணத் தூய்மைப் பணியாளரின் நேர்மைக்கு முதலமைச்சர் மற்றும் உச்ச நட்சத்திரம் ஆகிய இருவருமே நேரில் அழைத்து மதிப்பளித்தது, சாமானிய மக்களிடையே பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.