பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாம் நாளாக பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்று கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார். இவ்விழாவில், இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி.அனிதாவுக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அவ்விழாவில் பத்ம விபூஷன் விருது மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கும் அருண்ஜெட்லிக்கும் கிளாசிக்கல் பாடகர் பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் வழங்கப்பட்டது. பத்ம பூஷன் விருது தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாளுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கும் வழங்கப்பட்டது.
பத்ம ஸ்ரீ விருது சாலமன் பாப்பையா, நடிகை கங்கனா ரனாவத், மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், டாக்டர் ராமன் கங்காகேத்கர், பாடகர் அட்னான் சாமி, பத்மா பந்தோபாத்யாய் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.