தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ!

 
Dmk Dmk
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என விசாரணையில் தெரியவந்துள்ளது. 
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் அந்நாட்டு ராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.-ஐ சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. காஷ்மீரில் தாக்குதல் நடத்திய நபர்கள் சம்பா - கந்துவா எல்லை வழியே ஊடுருவி சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.