விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் - பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

 
Prabakaran Prabakaran

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். 

Pala Nedumaran

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம். இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.