கூட்டணிக்கு சூசகமாக அழைத்த பழனிசாமி.. திட்டவட்டமாக மறுத்த தவெக..!!
அதிமுக- பாஜக கூட்டணியில் இணைய எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அதனை நிராகரித்துள்ளது..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, கட்சிக் கட்டமைப்பு என தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அந்தவகையில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நீட்டித்த வண்ணமே உள்ளது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுக கூறி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதே இந்த சலசலப்புக்குக் காரணம். அதேநேரம் ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இதுஒருபுறம் இருக்க திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருக்கிறார். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என்பது விஜய் கட்சிக்கும் பொருந்தும் என்றும் அவர் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். இது ஒரு வகையில் தவெக மற்றும் நாதகவுக்கு விடுக்கப்பட்ட நேரடி அழைப்பாக பார்க்கப்பட்டது.

ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அழைப்பை அக்கட்சி தவிர்த்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக, “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம், சேலம், போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்! ” என குறிப்பிட்டுள்ளது.


