RCB வெற்றிக் கொண்ட்டாட்டத்தில் துயரம் : பழனிசாமி, பிரேமலதா, கமல் இரங்கல்..

 
எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா

பெங்களூருவில் ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்ததற்கு பழனிசாமி, கமல்ஹாசன் , பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன்  முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்டம்  சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.பி.எல் கோப்பையை  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி  வென்றதைக் கொண்டாடும் வகையில்,  கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயரச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

RCB வெற்றிக் கொண்ட்டாட்டத்தில் துயரம் : பழனிசாமி, பிரேமலதா, கமல் இரங்கல்.. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி : “பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார். 

kamal

மநீம தலைவர் கமல்ஹாசன் : “பெங்களூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் : “18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அந்த வெற்றியின் மகிழ்ச்சி நீடிக்காத வகையில்  ஏற்பட்டுள்ள துயரமான சம்பவம், ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.