திடீரென பச்சை நிறமாக மாறிய பாம்பன் கடல்; மீன்கள் உயிரிழக்கும் அபாயம்!

 
pamban


பூங்கோரை பாசியால் பாம்பன் கடல் பகுதியில் கடல் நீரின் நிறம் பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்க நேரிடும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது பாம்பன் பாலம். கடலின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் வரலாற்று சிறப்புமிக்கது. ராமேஸ்வரம் அருகே ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினமும் மீன் பிடிக்க செல்வர். அந்த வகையில் இன்று வழக்கம் போல மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது, கடல் நீர் பச்சை நிறமாக மாறி இருப்பதை பார்த்துள்ளனர். நேற்றிரவு கீழக்கரை கடற்கரைப் பகுதியில் ஊதா நிறத்தில் வெளிச்சம் வந்ததால் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில், இன்று கடல்நீர் பச்சை நிறமாக மாறியது மீனவர்களை அச்சமடையச் செய்துள்ளது. 

pamban

பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிற பூங்கோதை பாசிகள் கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து ஆய்வு ஆய்வு மேற்கொண்ட மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரையில் கடலில் பச்சை நிறப் பாசி உற்பத்தியாகும். இதை மீனவர்கள் பூங்கோரை என்று அழைப்பார்கள். கடலில் பாசி அதிகளவு படியும் போது கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டும் இது போன்று நிகழ்ந்தது. அச்சமயம் மீன்களின் செதில்கள் பாசிகளால் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் மீன்கள் சிரமப்பட்டனர். ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தன. கடலில் உருவாகியிருக்கும் பாசி விஷத்தன்மை உடையது அல்ல. பசியால் இறந்த மீன்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இரண்டு வாரங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என்பதால் மீனவர்கள் அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.