"மக்களாட்சியின் காவலராகச் செயற்கரிய செய்த பனகல் அரசர்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
tn

பனகல் அரசரின் செயல்களைப் போற்றி, எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் பயணிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 

பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர், ராமராயநிங்கார் வெலமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார். 1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடை பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். சென்னை மாகாண முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்த இவர், “பனகல் அரசர்” என்ற பட்டபெயரால் அழைக்கப்பட்டார்.

tn

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "#DravidianModel-இன் முதல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று! சமூகநீதிக்கு அடித்தளமிட்ட #CommunalGO-க்கு வழியமைத்தவர். வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர்.  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தவர். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரத்தில் பங்கேற்கச் செய்தவர். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியவர். மருத்துவக் கல்வி-வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கத் தடையாக இருந்தவற்றைத் தகர்த்தெறிந்தவர்.



'பனகல் அரசர்' குறித்த புத்தகம்தான் திருவாரூர் பள்ளியில் தலைவர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாகி சுயமரியாதை இயக்கத்தை நோக்கி ஈர்த்தது. மக்களாட்சியின் காவலராகச் செயற்கரிய செய்த பனகல் அரசரின் செயல்களைப் போற்றி, எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் பயணிப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.