#BREAKING : பனையூரில் பரபரப்பு : விஜய் காரை முற்றுகையிட்ட தவெக-வினர்..!

 
1 1

சென்னை ஈசிஆர் சாலையில் பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் இன்று காலை முதலே விழாக்கோலமாகி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, குறிப்பாக இதுவரை நிர்வாகிகள் நியமிக்கப்படாத பகுதிகளிலிருந்து ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்து வருகின்றனர்.

தலைவர் விஜய்யின் வருகை மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வருகையை கருத்தில் கொண்டு, பனையூர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான அரசியல் கட்சி நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டு, ஒரு சிறப்பம்சமாக இன்றைய நிகழ்வில் பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்சி அலுவலகத்தின் நுழைவாயில் மற்றும் உட்புற பகுதிகளில் கருப்பு உடை அணிந்த பெண் பவுன்சர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்டத்தை கண்ணியமாக கையாளவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


சட்டமன்ற தேர்தலை நோக்கிதமிழக வெற்றிக் கழகம் தனது காய்களை நகர்த்தி வருகிறது. பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை போன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ள விஜய், தற்போது மாவட்ட செயலாளர்கள் நியமனத்தை நிறைவு செய்வதன் மூலம், கட்சியின் நிர்வாக கட்டமைப்பை முழுமைப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். இன்று வெளியாகவுள்ள அறிவிப்பில், யார் யாருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்போகிறது? இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா? அல்லது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்விகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன. 


தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கு சாமுவேல் என்பவர் மா.செவாக நியமிக்கப்படவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது .

சாமுவேலின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்து சேர்ந்தார். அவரை தவெகவின் அலுவலகத்துக்கு அரை கிலோ மீட்டருக்கு முன்பாகவே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை கலைந்து போகுமாறும் அறிவுறுத்தினர். '2 வருசமா உண்மையா உழைச்சவங்களுக்கு எந்த மதிப்பும் இல்ல. தொகுதிக்குள்ள எந்த வேலையும் செய்யாத செல்வாக்கே இல்லாத ஒரு ஆளுக்கு போஸ்டிங் போட்டா என்ன நியாயம்?' என அஜிதாவின் ஆதரவாளர்கள் முறையிட்டனர்.


இதைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய்யின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட பணியமர்த்தப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஷபியுல்லா அஜிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அரைமணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையிலும் அஜிதா சமாதானம் ஆகவில்லை. விஜய் வரும் போது இங்கிருந்து பிரச்னை செய்துவிடாதீர்கள் எனக்கூறி அஜிதாவை பக்கத்து தெருவுக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த அஜிதாவிடம், 'இந்த முறையும் நாம தளபதியை பார்த்து பிரச்னையை சொல்லாம விட்டுட்டா, அவ்வளவுதான் எல்லாமே முடிஞ்சிடும்' என அவரது ஆதரவாளர்கள் கூறியிருக்கின்றனர். உடனடியாக மீண்டும் பனையூர் அலுவலகத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் வந்த அஜிதா, விஜய் காரை மறித்து போராட்டம். தனக்கு மாநில பொறுப்பு வழங்குவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு.