அரசியலில் திருப்பம் : புதிய கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்..!!
முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், 'எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' எனும் புதிய கட்சியை தொடங்கி, கொடியினை அறிமுகப்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், '' இன்றைய அரசியல் உலகம் அடையாள அரசியலையும், கொள்கை அரசியலையும் சார்ந்து சுழன்று கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் எவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது. திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதி மிக்க சமுதாயத்தை' உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.'' என்றார்.
வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், '' இந்த இயக்கம் உடனடியாகத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தொடங்கப்படவில்லை. இது ஒரு நீண்ட நெடிய அரசியல் பயணம். தேர்தல் என்பது இந்தப் பயணத்தில் வரும் ஒரு சடங்கு போன்றது. எங்களது கொள்கைகளுக்கு உடன்படுபவர்களைத் தேர்தலில் ஆதரிப்போம். அரசியல் என்பது இன்று வணிகமாகிவிட்டது. நாங்கள் அதை மாற்றி அறவழியில் பயணிக்க விரும்புகிறோம்'' என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், '' அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட நபருக்காக அரசியலில் வாழ்நாளை வீணாக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்கானது. அரசியல் என்பது தனி மனிதருக்கானது அல்ல; அது மக்களுக்கானது. நாம் தனிப்பட்ட முறையில் பயணித்தோம் என்பதற்காக நம் வாழ்நாளை வீணடிக்க முடியாது. ஓபிஎஸ்காக நாம் உயிரை துறக்க முடியுமா? நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன.'' என கூறினார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பதில் அளித்த அவர், '' அவருக்குப் பின்னணி இல்லாதது ஒரு வகையில் சாதகம். முன்னோர்கள் செய்த தவறுக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏப்ரல் மாதத்தில் அவரது தாக்கம் குறித்துக் கருத்துச் சொல்கிறேன். அவருக்கு கூடும் கூட்டங்கள் அவர் உழைப்பிற்கு கிடைத்தது'' என்றார். இன்றைய அதிமுகவிற்கும் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கும் - விஜய்க்கும் இடையேயான போட்டி தான்.'' என தெரிவித்தார்.
நீண்ட நாள் கழித்து புதிய கட்சி தொடங்க காரணம் என்ன என்ற கேள்விக்கு, '' இதுவரை அதிமுக, தேமுதிக, ஓபிஎஸ் அணியில் இருந்து நான் இதுவரை எதை கண்டேன்? மாடமாளிகை, கூடகோபுரமா?. இவ்வளவு நாள் அக்கட்சிகளில் இருந்து நான் நினைத்ததை செய்ய முடியவில்லை. ''யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தாரக மந்திரத்தோடு தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் முறையான தொடக்க விழா, வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. அன்று கட்சியின் விரிவான கொள்கைகளும், திட்டங்களும் அறிவிக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.

