"எங்கள் ஊரை காத்துக்கொடுத்த காவல் தெய்வம் முதல்வர் விஜய்"- பரந்தூர் விவசாயிகள் பேட்டி
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து ஏகனாபுரம் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். அப்போது முதல்வருக்கு பச்சைத் துண்டு அணிவித்து, நெற்கதிர், கிராம தேவதைகளின் புகைப்படத்தை பரிசாக கொடுத்து விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதலமைச்சர் விஜயை சந்தித்து நன்றி தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தூர் விவசாயிகள், “எங்கள் ஊரை காத்துக்கொடுத்த காவல் தெய்வம் முதல்வர் விஜய். விவசாய மக்களையும் பண்பாட்டையும் காத்து கொடுத்த எங்கள் காவல் தெய்வம் முதலமைச்சர் விஜய். பரந்தூர் விமானநிலைய திட்டதை கைவிட சொல்லி மன்றாடிக் கேட்டோம்.. உதயநிதியை சந்திக்க கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஆனால் விஜய் நான் முதல்வராக வந்தால் இத்திட்டத்தை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அதை காப்பாற்றியும் உள்ளார். பரந்தூர் விவசாயிகளின் வாழ்வில் விளக்கேற்றி வைத்த தலைவருக்காக பிரதான சாலைக்கு “விஜய் சாலை” என பெயரிட்டுள்ளோம்” என்றார்.

