எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

 
Lokh sabha

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

2023 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள்  முடங்கியது.  விடுமுறைக்குப் பின்னர் நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு  காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும்,  மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பவலியுறுத்தினர்.   இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

இந்நிலையில், கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனிடையே ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் பட குழு மற்றும் தி எலிபேண்ட்ஸ் விஸ்பர்ஸ் குறும்பட குழுவுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.