தவெக தலைவர் விஜய்க்கு பவன் கல்யாண் அட்வைஸ்..! அரசியலுக்கு வந்துவிட்டால்...

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “விஜய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவருக்கு ஆலோசனை எதுவும் தேவையில்லை. ஆனால் அவருக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். அரசியலில் நிலைத்து இருங்கள். என்ன நடந்தாலும் மக்களோடு இருங்கள். அரசியல் ரொம்ப கஷ்டமானது. அதில் எதற்கும் தயாராக இருக்கனும். வெற்றி என்பது பின்னர் போகப் போக வரும். முதலில் கட்சியை வலுப்படுத்துவது தான் முக்கியம் என பவன் கல்யாண் கூறியுள்ளார்.
மேலும் அரசியலுக்கு வந்துவிட்டால் பல தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும் என பவன் கூறி இருக்கிறார். அரசியலுக்கு வந்துவிட்டால் தனிப்பட்ட வாழ்க்கை என்பது இருக்காது. தொடர்ந்து உங்களை விமர்சிப்பார்கள். எல்லோருக்கும் எதிரியாக மாற நேரிடும். ஒவ்வொரு நடிகருக்கும் சரி, ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் சரி ஒரு தனிப்பட்ட பாணி இருக்கும். எனக்கு எனது பாணி ஒர்க் அவுட் ஆனது. அது எல்லாருக்கும் சரிப்பட்டு வருமா என தெரியவில்லை.
அதேபோல் பகுதி நேர நடிகராகவும், பகுதி நேர அரசியல்வாதியாகவும் இருப்பதாக தன் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கும் பதிலளித்துள்ள பவன் கல்யாண், எனக்கு பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் என கூறி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் இருக்காது என உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் நடிப்பில் தற்போது ஓஜி, ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.