மதுரை வரவிருந்த பவன் கல்யாண் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு..!!
விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, முருக பக்தர் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மதுரைக்கு வர இருந்த ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பயணம் தாமதமாகியுள்ளது.
பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

அந்தவகையில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்க இருக்கிறார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தருவதாக இருந்தது. தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகர் கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் புறப்பட வேண்டிய தனி விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதால் அதை சரி செய்த பின் விமானம் புறப்படுமா.? அல்லது மாற்று விமானம் மூலம் புறப்படுவாரா என்கிற விவரங்கள் வெளியாகவில்லை. ஆந்திரா துணை முதல்வர் மதுரை வரும் பயணம் தாமதம் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும் பயணம் நேரம் மாற்றப்பட உள்ளது. அதேநேரம், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் பிற்பகல் 12.30 க்கு மேல் அவர் மதுரை விமான நிலையம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


