இனி ரேஷன் பொருட்கள் பெற ஆதார் எண் போதும்.. எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு..

 
இலவச ரேஷன் திட்டம்

புதிதாக இடம் மாறி செல்பவர்கள் ரேஷன் அட்டைகளை மாற்றவோ, புதிய அட்டைகளை வாங்கவோ தேவையில்லை எனவும்,  ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற ஆதார் எண்ணே  போதும் என்றும்  மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

நாடாளுமன்ற  மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை  அமைச்சர் பியூஷ் கோயல், கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார். அதில், மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும்,   நாடு முழுவதும் மொத்தம் உள்ள 80 கோடி ரேஷன் பயனாளார்களில் 77 கோடி பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவதாகவும் அவர் கூறினார்.

ஆதார்

புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலைக்கு  செல்லும்  அந்த ஊர்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் எதிர்கொள்ளும் இன்னல்களை கருத்தில் கொண்டே இந்த திட்டத்தை பிரதமர் மோடி  செயல்படுத்தியதாக கூறினார்.   மேலும் இந்த திட்டம் மூலம் வேலைக்காக வேறு ஒரு ஊருக்குச் செல்லும் நபர் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதே நேரம் அவர் ஊருக்கு திரும்பிய பின்னர்  அவருடைய குடும்பத்தினர், அவர்கள் வசிக்கும் ஊர்களில் தங்கள் பங்கான உணவு தானியங்களை பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

ரேஷன் கடை

அதேபோல் வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்லும்போது, ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை என்றும், ஏற்கனவே உள்ள தங்களது ரேஷன் கார்டின் எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ எந்த ரேஷன் கடையிலும் தெரிவித்து, ‘பயோமெட்ரிக்’ முறையில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.   இந்த திட்டம் மூலம்  புதிய ரேஷன் கார்டு பெறுவதில் உள்ள சிக்கலையும்,  போலி ரேஷன் கார்டு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்றும்,   இதுவரை 7 கோடி பேர் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெற்று ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தால்   பலன் அடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரித்தார்.