மக்களே இதை நம்பாதீங்க : உங்களை திசை திருப்ப திமுகவினர் செய்த வேலை..!
மக்களவை தேர்தலுக்கான நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் மூன்று பேர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் மூலமாக 3 கோடியே 99 லட்சம் எடுத்து சென்ற போது தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்டனர். அவர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்ததில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக எடுத்து செல்வதாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும், கைப்பற்றப்பட்ட பணம் கருப்பு பணமா? என அதிகாரிகள் விசாரிப்பதால் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பின்னர், நெல்லை – மேலப்பாளையம் பகுதியில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் கணேஷ் மணி என்பவர் வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கணேஷ் மணி என்பவரின் வீட்டில் இருந்து ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்ததோடு, வேட்டி, மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இப்படி தொடர்சியாக நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்துவதால் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். அதில், ”எனக்கு அரசியலில் நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர். மக்களை திசை திருப்ப திமுகவினர் செய்த வேலை தான் இது. எனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை. கைப்பற்றப்பட்ட ரூ. 4 கோடி எனக்கு சொந்தமானது இல்லை”, என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பணம் தனது இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தாலும், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இந்த விவகாரம் அவருக்கு எதிராக பிரதிபளிக்கும் என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” - நயினார் நாகேந்திரன்#BJP | #NainarNagendran | #LokSabhaElections2024 | #DMK pic.twitter.com/00S4tiHs7a
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 7, 2024


