மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்.. தீ விபத்துக்கான காரணம் இதுதான்..!! - ஆட்சியர் பிரதாப்..
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. ரயில் பெட்டிகளில் டீசல் இருந்ததால், அடுத்தடுத்து தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சரக்கு ரயிலின் 8 டேங்கர் பெட்டிகள் தீ பிடித்து எரிந்ததால், வானுயர புகை அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருவள்ளூர் ஏகாட்டூரைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு புகையின் தாக்கல் உணரப்பட்டது. இதனால் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த மக்கல் மூச்சுத் திணறக் உள்ளிட்ட சிரமங்களுக்கு உள்ளாகினர்.

அத்துடன் டீசல் இருக்கும் ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியில் அருகில் உள்ள குடியிருப்புகளில் சமையல் கேஸ் சிலிண்டர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீவிபத்தைத் தொடர்ந்து சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூரில் இருந்து மட்டும் புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் நடு வழியில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பயணிகளின் வசதிக்காக திருவள்ளூர் - அரக்கோணம் மார்க்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிரதாப், “ஐஓசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது தீப்பிடித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறை, மாவட்ட தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் முடுக்கிவிடப்பட்டு , தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. தீ மேலும் பரவாமல் தடுக்க, எரிந்துவரும் பெட்டிகளை ஒட்டியுள்ள 4 பெட்டிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற சரக்கு ரயில் பெட்டிகள், தனியாக பிரிக்கப்பட்டு தூரமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.. சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையின் பாதிப்பு அதிகளவில் இருப்பதால், அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருப்பவர்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளவர்கள் சென்னை மற்றும் தொலைவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். ” என்று அவர் தெரிவித்துள்ளார்.


