கனமழையால் தென் மாவட்ட மக்களுக்கு மிகக் கடுமையாக பாதிப்பு - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!!

 
ops

அதி கனமழை காரணமாக தென் மாவட்ட மக்களுக்கு மிகக் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு  தி.மு.க. அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சுவடுகள் மறைவதற்குள், கடந்த இரண்டு நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இந்த அதிகனமழை தென் தமிழக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி அருகே காயல்பட்டினம் என்ற இடத்தில் அதிகபட்சமாக 96 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், வேதநத்தத்தில் குறைந்தபட்சமாக 30 செ.மீ. மழை பதிவாகி உள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தென் தமிழகத்திற்கு செல்லும் பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

ops

தூத்துக்குடி, கோரப்பள்ளி ஏரியின் கரை உடைந்ததன் காரணமாக வீரநாயக்கன்பட்டி, முத்தையாபுரம் போன்ற கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும், மதுரை-ஒட்டப்பிடாரம் இணைப்புச் சாலை, தூத்துக்குடி – குமரி நெடுஞ்சாலை ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், ஒட்டப்பிடாரத்தில் தரைப் பாலம் மூழ்கியுள்ளதாகவும், தூத்துக்குடி விளாத்திகுளம் சாலையில் கழுத்தளவு தண்ணீர் ஓடுவதன் காரணமாக அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், கோவில்பட்டி அருகே மேல்பாரப்பட்டி கிராமம் மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குமரி மாவட்டம் கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மொத்தத்தில், பெரும்பாலான இடங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

அதே சமயத்தில், பாதிப்பிற்கு ஏற்ற வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. 16 முதல் 18 டிசம்பர் வரை தென் மாவட்டங்களில் ஆங்காங்கே அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையத்தால் 14-12-2023 அன்றே தெரிவித்த நிலையில், போதுமான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. 800 பயணிகளுடன் திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட இரயில் ஸ்ரீவைகுண்டத்தில் 20 மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறது. இதில் உள்ள பயணிகளில் 500 பேர் இரயில் நிலையத்திலும், 300 பேர் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர்களுக்கு இதுவரை உணவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், பிற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு சென்றடையவில்லை என்றும் கூறப்படுகிறது.

ops
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்குச் சென்ற திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பிறகு அதைத் தவிர்ப்பது வேதனைக்குரிய செயலாகும். கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையில் தென் மாவட்ட மக்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட மக்கள் என்னென்ன இன்னல்களுக்கு ஆளானார்களோ அதைவிட மோசமான இன்னல்களுக்கு தென் தமிழ்நாட்டு மக்கள் ஆளாகியுள்ளனர். தென் தமிழ்நாட்டு மக்கள் நிர்க்கதியாக நிற்கின்ற இந்தத் தருணத்தில், 19-12-2023 அன்று புது டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் அவர்கள் சென்றிருப்பது ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல் உள்ளது. இந்தியா கூட்டணி கூட்டத்தையொட்டி, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க நேரம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும் நேரம் ஒதுக்கி இருக்கிறார். இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ops

தென் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குழுவினை அமைத்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவும், நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கவும், பாதிப்பின் தன்மை மிக அதிகமாக இருப்பதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக 25,000 ரூபாய் வழங்கவும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை கடைபிடிக்குமாறும் அப்பகுதி மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இயல்பு நிலை திரும்பும்.

இந்த இக்கட்டான சூழலில், கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் நான் தென் தமிழகத்திற்கு வரவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்