என்.எல்.சி-யை கண்டித்து நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!

 
10 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தப்பட்ட நிலம் -  என்.எல்.சி. பணிகள் குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம்..

நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ தலைமையில் நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி. நிறுவனம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் நேற்று முன் தினம் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில், அது வன்முறையாக மாறியது.  

இந்நிலையில், நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ தலைமையில் நாளை  நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிமுக புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.